போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் தலைமன்னாரில் கைது!
சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினருடன் இணைந்து சிறிலங்கா கடற்படையினர் நேற்றைய தினம் (06) மேற்கொண்ட விசேட தேடுதலில் தலைமன்னார் அம்பாள் நகர் பகுதியில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
விசேட தேடுதல்
கரையோரப்பகுதிகளூடாக நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம்,
அந்தவகையில் நேற்றைய தினம் (06) தலைமன்னார் அம்பாள் நகர் பகுதியில், காவல்துறையின் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி தம்மன்னா ஆகியோர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 526 பிரகபிலின் மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னாரின் அம்பாள்நகரில் உள்ள ஒரு குடியிருப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதனைத் தொடர்ந்தே, மருந்து மாத்திரைகள் மற்றும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடைய மன்னாரை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் மருந்துப் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.