யாழில் சடுதியாக அதிகரித்த போதைப் பொருள் பாவனை..! களமிறக்கப்பட்ட விசேட படைப்பிரிவு
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதை பாவனை தொடர்பில் பலாலி பாதுகாப்பு தலைமையகம் நேற்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
" வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கஞ்சா தொகையானது கைப்பற்றபட்டுள்ளது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இளம் சந்ததியினரும் அவற்றுக்கு அடிமையாகும் தன்மை வெகுவாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இத் துர்பாக்கிய நிலையை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டு யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேய சுந்தரவினுடைய விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மேலும் அதனுடன் தொடர்புடையவர்களை நீதி முன் நிறுத்தல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
51 ஆவது காலாட் படைபிரிவிற்கு கீழ் காணப்படுகின்ற J 150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கு பகுதியில் 513 ஆவது காலாட் படைபிரிவின் 16 ஆவது கெமுண ஹேவா படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது 100kg கஞ்சாவுடன் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் இந்நடவடிக்கைகளை கட்டுபடுத்தும் முகமாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் அவை தொடர்பான மேலதிக தகவல்களை கீழ்க்காணும் முகவரிக்கோ அல்லது தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பாதுகாப்பு தலைமையகம்,
வயாவிளான் யாழ்ப்பாணம்
தொ.இல : 076 6907751