கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!
கனடாவில் வம்சாவளி அடிப்படையிலான புதிய குடியுரிமைச் சட்ட மசோதா (Bill C-3) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கனேடிய இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விதியின்படி, வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிலேயே பெற்றெடுக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளைகளுக்குக் கனேடிய குடியுரிமை தானாகவே கிடைக்காது என்ற நிலை இருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழந்த கனேடியர்கள் (Lost Canadians) என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஒன்ராறியோ உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று, கனடா அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை
இந்தச் சட்ட மாற்றத்தின்படி கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்களது முன்னோர்களின் குடியுரிமை ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எத்தனை தலைமுறைகள் கடந்திருந்தாலும் மீண்டும் கனேடியக் குடிமகனாகத் தகுதி பெறுகின்றனர்.

மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ள இந்த Bill C-3 சட்டத்திருத்தம், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான கனேடிய வம்சாவளியினருக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவிலிருந்து கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோரி வரும் விண்ணப்பங்கள் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் குடிவரவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |