உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பந்தமான உண்மையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா : சிறிநேசன் சந்தேகம்
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்கதல் சம்பந்தமான உண்மையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று தாங்கள் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08.09.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
உளவுத்துறையோடு தொடர்புடைய ஒரு சதி முயற்சி
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் காணப்பட்டது. தற்போது அக்கருத்துக்கள் உண்மைதான் என சொல்லக்கூடிய அளவிலான கருத்துக்கள் செனல் 4 இன் ஊடாக வெளிவருவதனை காண கூடியதாக உள்ளது.

அத்துடன் தாக்குதல் நடைபெற்ற பின்னர் கதைக்கப்பட்ட கதைகளும் தற்போது கதைகப்படுகின்ற கதைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அக்காலத்தில், நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் இச்சம்பவம் நடைபெற்றது என்ற அடிப்படையில் தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
அத்துடன், அதிபர் ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்ட விடயங்களில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்ததன் பின்னர், பேராயர்கள் இத்தாக்குதல் சம்பவத்தை ஆட்சி மாற்றத்திற்கான, அதிகார மாற்றத்திற்கான சதி திட்டம் என்பதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இதனை உளவுத்துறையோடு தொடர்புடைய ஒரு சதி முயற்சி என்றும், அதனோடு தொடர்புடைய அதிகாரியின் பெயரையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மட்டகளப்பு சிறைச்சாலையில் சதி திட்டம் ஒன்று இடம்பெற்றதாக சொல்லப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சிறைகூடம் என்று சொல்லுவது, குற்றவாளிகளை சீர்த்திருத்துகிற இடமாக இருக்க வேண்டுமே ஒழிய, மீண்டும் ஒரு குற்றத்திற்கு வழி ஏற்படுத்தும் இடமாக இருக்க கூடாது” என்றார்.