ஈஸ்டர் தாக்குதல் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சித் திட்டத்தின் அங்கம்- கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயலாக இருக்கும் என சந்தேகம் இருந்தது.
எனினும் பின்னர் நடத்திய விசாரணைகளில் அது மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சித் திட்டத்தின் அங்கம் எனத் தெரியவந்தது. நான் உட்பட சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். அதனைச் செய்ய இலங்கை அரசு தவறியுள்ளது. இந்தத் தாக்குதல் நடந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் கடந்த ஆண்டு ஆரம்பித்த சாட்சியங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறிய பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முறை ஒன்றைத் திட்டமிட ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கர்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.