உயிர்த்தஞாயிறு தாக்குதல் நேரம் 6000 வாள்கள் ஏன் இறக்குமதி செய்யப்பட்டன? விசேட விசாரணையில் பொலிஸ்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நேரம் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியான Mohamad Inshaf இனால் இந்த வாள்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தலைமையில் இந்த விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, இது தொடர்பில் சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மே மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் தீவிரமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிடுமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.