உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஆரம்பிக்குமாறு சஜித் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையினை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (08) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிவும் அனுபவமும் ஷானிக்கு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
சேறுபூசும் அரசியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி அதிபர் பதவியைப் பெற்று, அரசாங்கம் அமைத்து, அமைச்சுப்பதவிகளையும் பெற்றுவிட்டு இன்று இது பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மை மாத்திரமே வெளிப்பட வேண்டும், இந்த சேறுபூசும் அரசியலில் ஈடுபட நாங்கள் தயாராக இல்லை என்றும் சஜித் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நடத்திய ஷானி அபேசேகரவை சிறையிலடைத்தமை மூலம் தாக்குதல் தொடர்பான சில உண்மைகள் புலப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை கைவிலங்குகள் இல்லாமல்,கழுத்தில் கயிறுகள் பிணைக்கப்படாமல் ஷானி அபேசேகரவிடம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
