ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அந்தத் தாக்குதல்களுக்கும் அப்போதைய ராஜபக்ச குடும்ப அரசியல் எழுச்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல்களின் பிரதான திட்டமிடுபவராக குறிப்பிடப்படும் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிரான வழக்கில் 23,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று தீர்ப்பானது அறிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த நிலையில் அதில் 15 பேர் குற்றவாளிகள் எனவும், 9 பேர் குற்றமற்றவர்கள் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Channel 4 ஆவணப்படம்
இந்த வழக்கின் பின்னணியில், 2023ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Channel 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளும் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன.
அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சில உள்விவரங்களை அம்பலப்படுத்துபவர்கள்(Whistleblower witnesses), ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் சூழல் உருவாக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக, 2019 தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்வதை முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து வெற்றி பெற்றார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான தேசிய பாதுகாப்புத் தோல்விகள் குறித்து 2023ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு எதிராக இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.
தனியான விசாரணை
தற்போது சுரேஷ் சலே தொடர்பாக தனியான விசாரணையும் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல்களை திட்டமிட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சலே இந்தக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இதனால், ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகள், நீதிமன்ற விசாரணைகள் மற்றும் புதிய விசாரணைகளுடன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தாக்குதல்களின் உண்மையான பின்னணி, அதற்கு முன்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது மற்றும் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலை ஆகியவை தொடர்பில் முழுமையான உண்மையை வெளிக்கொணர வேண்டும் என ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |