இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் வயோதிபர் எண்ணிக்கை
ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் இலங்கையில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர, குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை
"இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.

ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்."என்றார்.
தடுக்கி விழுதல்
இதேவேளை வயதான சமூகத்தினரிடையே காணப்படும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் தடுக்கி விழுதல் தற்போது ஒரு நோயியல் நிலைமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முதியோர் நோய் நிபுணர் வைத்தியர் சிதிர செனவிரத்ன குறிப்பிட்டார்.

"65 வயதுக்கு மேற்பட்டவர்களில், மூன்று பேரில் ஒருவர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பல சமயங்களில், விழுவது ஒரு நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், இப்போது விழுவதையும் ஒரு நோய் என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். பெரும்பாலும் விழுந்த பிறகு காயம் ஏற்பட்டால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கிறோம்; ஆனால் விழுவதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்பதில்லை.
விழுவது என்பது ஒரு நோய்தான்
வயதாகும்போது விழுந்தால், இது வயதின் காரணமாக நடக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், அது சாதாரணமானது அல்ல. விழுவது என்பது ஒரு நோய்தான். விழுவதால் விபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

விழுவதால் மரணங்கள் கூட நிகழும் சந்தர்ப்பங்கள் உள்ளன. பலவீனம் என்பது விழுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். இதைப் பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்."
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |