தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க விடாப்பிடி
ஸ்ரீலங்காவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபிற்கு அங்கீகாரம் அளிக்கும் செயன்முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆயுட்காலம் முடிந்துள்ள 09 மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கான யோசனை நேற்றுமுன் தினம் மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் அமைச்சர்களுக்கு இடையே உள்ள கருத்து முரண்பாடு காரணமாக அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாறாக அடுத்த வாரத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக தொகுதி வாரி முறையில் 70 வீதமும், விகிதாசார முறையில் 30 வீதமுமாக தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருந்தாலும், இதற்கு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டளஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக தேர்தல் முறையில் எதிர்ப்பு உள்ளதால் எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் மேலும் தாமதமாகும் சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கக்கூடிய மாகாண சபைகள் இன்று அரச தலைவரின் பிதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
அது மக்களின் வாக்குரிமையை பறிக்கின்ற செயற்பாடாகும். மாகாண சபைத் தேர்தல் முறையை நியமிப்பது கடினமாக செயற்பாடல்ல.
தேர்தல் முறை, அதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டால் எமது நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியும். விகிதாசார முறை நீக்கப்பட்டு புதிய முறை வருவதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தெளிவூட்டல் மேற்கொள்ளப்படவில்லை.
மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். விகிதாசார முறை 30 வீதமாகவும், 70 வீதம் தொகுதிவாரியாகவும் நடத்தப்படுவதற்கான யோசனை அரசாங்கம் முன்வைத்திருப்பதாக கூறப்பட்டாலும் அதனை ஏன் அரசாங்கம் மூடிமறைக்கின்றது?
அரசாங்கம் யோசனையை பகிரங்கப்படுத்தினால் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.