20 சதவீத மின் கட்டண குறைப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (Public Utilities Commission) மற்றும் மின்சார சபைக்கு (Electricity Board) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் காமினி வலேபொட (Gamini Valepoda) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவு குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் 8,200 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.
மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6000 கோடி ரூபா எனவும், 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |