மின்சாரத்துறையில் நடந்த மற்றுமொரு ஊழல் மோசடி : ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்
700 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்ப்பத்தி திட்டம், 100% மின்கல சேமிப்புக் கட்டமைப்பு, கடத்தி இணைப்புகளும் உள்ளடங்களான கிளிநொச்சி பூநகரி சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும்,முறையான கொள்முதல் நடைமுறைகளுக்குப் புறம்பாக அந்தத் திட்டத்திற்காக அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது மற்றுமொரு ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான பிரவேசம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (15) அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளி அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம்
“2022 ஜூன் 9 ஆம் திகதி அன்று இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, 10 மெகாவாட்டிற்கு மேல் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் திட்டங்களுக்கு டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி யோசனை முன்வைத்த சந்தர்ப்பத்தில், இந்த யோசனயை பொறுப்பான அமைச்சர் முதலில் இணக்கம் தெரிவிருந்திருந்தாலும் பின்னர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் நாட்டிற்கான ஒரு வளமாகும் என்றாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் போட்டித் தன்மை நீக்கப்பட்டதன் காரணமாக, இங்கு மாபியா தற்போது செயல்பட்டு வருகிறது.
எந்த அனுபவமும் தகுதிகளுமற்ற நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு இந்த உரிமப் பத்திரங்கள் மறுவிற்பனை செய்யும் மோசடியும் இடம்பெறுகிறது.
பூநகரி சூரிய சக்தி மின்னுற்பத்தி திட்டத்தில் பாரிய ஊழல் தலைவிரித்தாடுவதோடு, இதில் போட்டித் தன்மை தவிர்த்து தமது நெருங்கிய நண்பர்களுக்கு இத்திட்டத்தை வழங்குவதானது நாட்டுக்கு பாதிப்புகளை விளைவிக்கும் செயலாகும்.
இந்த வகையில்,அமைச்சரவை செயலாளர் தலைமையில் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் நாட்டிற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிறுவனத்தால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இயலுமை உள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்யவில்லை.
தேசிய சொத்துக் கொள்ளை
யுனைடெட் சோலார் எனர்ஜி சிறிலங்கா பிரைவேட் லிமிடட் என்ற இந்நிறுவனத்தின் இணையதளத்தின் பிரகாரம், இவர்கள் செய்த எந்தத் திட்டம் தொடர்பான தகவலையும் அவர்களால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
இந்நிறுவனம் 6 கண்டங்களில் உள்ள 20 நாடுகளில் 37 திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டாலும், இது தொடர்பாக எந்தவிதமான பௌதீக ரீதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.
இது தேசிய சொத்துக் கொள்ளை என்பதோடு, 2024 தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் போட்டி முறையை மாற்றி, இதுபோன்ற திட்டங்களை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருவது, இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுகின்றது.
2023 மார்ச் 15 ஆம் திகதி முதல் யுனைடெட் சோலார் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஒரு மோசடியான நிறுவனமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் பெயரிட்டு, இந்நிறுவனத்துடன் எந்தவித கொடுக்கல் வாங்கல்களையும் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளதால், இந்நாட்டு புலனாய்வு ஊடகவியலாளர்கள் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளைசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |