சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை
இலங்கையில் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள சட்டங்களுக்கு எதிராக இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து வாயை மூடச்செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்களில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அண்மைகாலமாக இலங்கையில் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் பலவிதமான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
ஏற்கனவே இருந்த சட்டங்களை பிரயோகித்து கருத்து சுதந்திரத்தை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யும் செயற்பாடுகள் நடந்து கொண்டு வந்தன.
தற்போது அந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கும் போர்வையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை தயாரித்து இன்னும் படுமோசமாக சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
மிக அண்மையில் கூட நிகழ்நிலை காப்பு சட்டம் என்கிற சட்டமெல்லாம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தை மிக வெகுவாக பாதிப்படைய செய்திருந்தது.
அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியிருந்தோம். அதற்கான தீர்ப்பு இன்னமும் வரவில்லை.
சர்வாதிகார சூழ்நிலை
ஆனால் அந்த மாதிரியான சட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும் அதற்கெதிராக மக்கள் கருத்துக்களை சொன்னால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான முன்னேற்பாடுகளாகவே இவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதனால் தான் சட்டத்தரணிகள், சிவில் சமூக பிரதிநிதிகளோடு சேர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கை மன்ற கல்லூரியிலே பிற்பகல் 3 மணியளவில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்." என்றார்