பிள்ளையான் தலைமையில் அவசர கூட்டம்
டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும், சமூகமட்ட அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்த நிலையில், அவசர கலந்துரையாடல் ஒன்று வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இருபத்தைந்தாம் திகதி வரை 354 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், குறிப்பாக நான்கு கிராம அதிகாரி பிரிவில் அதிகரித்து காணப்படுகின்றது.
அந்த வகையில் உடனடியாக பேத்தாழை, கண்ணகிபுரம் ஆகிய கிராம அதிகாரி பிரிவில் நாளை செவ்வாய்க்கிழமை துப்பரவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்தோடு ஏனைய கிராம அதிகாரி பிரிவுகளில் துப்பரவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறிப்பாக வீட்டுச் சூழலை துப்பரவு இல்லாமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும், வெற்றுக் காணிகளை துப்பரவு இல்லாமல் வைத்திருபவர்களுக்கு எதிராகவும் உடனடியாக வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் பணிப்புரை வழங்கப்பட்டது.