ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலருக்கு எதிராக வழக்கு - அமைச்சர் சரத் வீரசேகர தகவல்
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேலும் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் நிறைவாகவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதுவரை ஈஸ்டர் தாக்குதல் பற்றி 32 பேருக்கு எதிராக 9 விதத்திலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றி 200இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பலர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் எதிர்வரும் நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குகள் பற்றிய தகவல்களை அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுவரை 32 சந்தேக நபர்களுக்கு எதிராக 09 வகையான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். குறைபாடுகள் இருந்த விசாரணை ஆவணங்களில் 75 சதவீதமானவை பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவை தற்சமயம் சட்டமா அதிபருக்கு ஆட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்குத் தேவையான 25 சதவீத பூரணப்படுத்தப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததன் பின்னர் விசாரணைகளை நிறைவுப்படுத்த காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேலும் விரைவுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகளை தாம் நியமித்திருப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் உட்பட பலர் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.