செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.
அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
சர்வதேச விசாரணை
இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22.07.2026) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 8.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.













மேலதிக தகவல் கஜி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 4 மணி நேரம் முன்