இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் குறைந்த வருமானம் பெறும் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்கான மனிதாபிமான உதவியாக 74 மில்லியனுக்கும் அதிகமான ரூபா நிதி உதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனும் குறைவடைந்துள்ளது.
மின்வெட்டு மற்றும் கல்விக்கான எழுதுபொருட்கள் இல்லாத காரணத்தால் பல பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
முதலுதவி, மருத்துவப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாடசாலை பொருட்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்நோக்கம் கொண்டதான இந்தப் பண உதவியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அதிதேவைகள் காணப்படும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரண அவசர நிதியம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செம்பிறைச் சங்கம் ஆகியவற்றுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் உலகின் முன்னணி நன்கொடையாளராக காணப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் உள்ள மக்களுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை வெளிகாட்டும் வகையில் இந்த உதவியானது வழங்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 7 மணி நேரம் முன்
