விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி அம்பாறையில் அகழ்வு!
அம்பாறை - சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று (17) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த காலத்தில் குறித்த காணியில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக அம்பாறை விசேட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த அகழ்வு பணி நடைபெற்றது.
தடயப் பொருள் மீட்கப்படவில்லை
இதன்போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர், சம்மாந்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், அம்பாறை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணி இடம்பெற்றது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் எந்தவொரு தடயப் பொருளும் மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


