அமெரிக்காவில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்
அமெரிக்காவில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், உள்ள காகித உற்பத்தி ஆலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்த காகித ஆலையில் மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இங்கு பெரிய இரசாயன தொட்டியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கலன்கள் கொண்ட கலவை தயாரிக்கப்பட்டு இருந்தது.
வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடிய இரசாயன கலவை
இந்த நிலையில், அந்த தொட்டி திடீரென வெடித்துள்ளது. அதில், இருந்த இரசாயன கலவை வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில், காகிதங்களை எடுத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிறிய ரக பாரவூர்திகள் கவிழ்ந்தன. ஆலையின் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டது.

இந்த தீங்கு ஏற்படுத்தும் இரசாயன திரவம் பரவியதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். கடந்த வியாழக்கிழமை வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனால், 9 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்ற 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.எனினும், 11 பேர் பலியாகி இருக்க கூடும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
அதிக நச்சு தன்மை கொண்ட இரசாயனம்
தொட்டியில் இருந்து வெளியேறிய இரசாயனம் அதிக நச்சு தன்மை கொண்டது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் பரவ கூடிய வாயுவை சுவாசிப்பதும் கூட பலத்த சுவாச பாதிப்புகளையும், காயங்களையும் ஏற்படுத்தும்.

இந்த சம்பவத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, அந்த காகித நிறுவனம் இரங்கல் தெரிவித்து உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |