தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: இரத்து செய்யுமாறு வைகோ மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ(Vaiko) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் Unlawful Activities (Prevention) Act (UAPA) படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை 14.05.2024 அன்று, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.
அமைப்புக்கு தடை
அந்தத் தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா (Justice Manmeet Pritam Singh Arora) தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து 05.06.2024 அன்று ஒன்றிய அரசு மீண்டும் அடுத்த அரசாணை வெளியிட்டது.
அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது? விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 23.07.2024 மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்திய ஒன்றியத்தில், தடை விதிக்க முகாந்திரம் இல்லை.
மனுத்தாக்கல்
ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் 23.07.2024 மாலை டெல்லியில் தீர்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இதே போன்ற மனுவை வைகோ நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |