அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை நீக்கம் : பயணிகளுக்கு தொடரும் சிக்கல்
புதிய இணைப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி (Sean Duffy) அறிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தடையினால் ஏற்பட்ட பயணக் குழப்பங்கள் முழுமையாகச் சீரடைவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவும், ஏராளமான பயணிகள் இன்னமும் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பாடல் கோளாறு காரணமாகவே இந்த நாடளாவிய விமானத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்படவிருந்த விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்காவில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்துத் தடை இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் (Markwayne Mullin), இது அமெரிக்காவிற்கு எதிரான சைபர் தாக்குதல் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து முடக்கம்! அதிகாரிகள் தீவிர விசாரணை
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட திடீர் தகவல் தொடர்புக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் புறப்படும் விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் விமான நிர்வாகம் (FAA) இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி உத்தரவால் அமெரிக்கா முழுவதும் சுமார் 7,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சைபர் தாக்குதல்
இந்தநிலையில் அமெரிக்காவின் அனைத்து விமானப் பாதைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களையும் பாதிக்கும் வகையில் பாரிய தகவல் தொடர்புச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி (Sean Duffy) உறுதிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் இக்கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரும் வரை அமெரிக்காவின் எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் விமானங்கள் புறப்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து
ஏற்கனவே வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் உடனடியாகத் தரையிறக்கப்படவில்லை எனவும் அவை பாதுகாப்பாகத் தங்களது இலக்குகளை நோக்கி வழிநடத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப் போக்குவரத்து வரலாற்றில் இத்தகைய நாடு தழுவிய கிரவுண்ட் ஸ்டாப் (Nationwide Ground Stop) உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்தத் தகவல் தொடர்புக் கோளாறு தொழில்நுட்பத் தவறால் ஏற்பட்டதா அல்லது சைபர் தாக்குதல் போன்ற வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து FAA அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயண நேர மாற்றங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |