நானோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதி -விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள உண்மைகள்
இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ததில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவிப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண(Dr. Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
இன்று (ஒக்.26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீன கரிம உரங்களின் தரம் குறைந்தமையினால், இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரத்தை அவசர கொள்வனவாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
திரவ உரப் போத்தல் ஒன்றின் பெறுமதி 1302.18 ரூபாவாகவும், அரசாங்கம் உரத்தை 5230 ரூபாவாகவும் கொள்வனவு செய்திருந்ததாக ஊடகவியலாளர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ரமேஷ் பத்திரண, இந்தக் கூற்று சரியானதல்ல எனவும், எதிர்காலத்தில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணை சபையொன்று நியமிக்கப்படவில்லை எனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.