கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: தீவிரமடையும் விசாரணை!
தோஹாவிலிருந்து இன்று (28.12.2025) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் தொடர்பிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டது.
அதன்படி, குறித்த விமானத்திற்குள் நால்வர் வெடிப்புச் சம்பவமொன்றை நிகழ்த்தத் தயாராக உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
விசாரணைகள்
இவ்விடயம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள், குறித்த விமானியிடம் வினவியபோது, விமானத்தினுள் அத்தகைய பாதுகாப்பற்ற நிலைமை எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் அது பாதுகாப்பு முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது விமானத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1.07 க்கு தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
கடந்த 26ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலைப் போன்றே, இதுவும் ஒரு போலியான தகவல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரண்டு மின்னஞ்சல்களும் வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |