வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணம்: 50 வயது நபர் கைது
4 இலட்சம் ரூபாய் பணம்
வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது, இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சிதம்பரபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடு தொடர்பில் சிதம்பரபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் நிரோசன் தலைமையிலான உப காவல்துறை பரிசோதகர் கமகே மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்களான பண்டார, மதன்ராஜ், ரவிகரன் உள்ளடங்கிய காவல்துறையினர் துரித நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் கைது

இதன்போது சிதம்பரபுரம் பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.