விவசாயிகளுக்கு நெல் அழிவு கொடுப்பனவு : ரவிகரன் எம்.பி விடுத்த எச்சரிக்கை
நெல் அழிவுக்கொடுப்பனவுகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கத் தவறினால், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச்சபை முல்லைத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்குடியிருப்பு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றைய தினம் (18.07.2025) இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவுகள்
கடந்த நெல் விளைநிலங்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ரவிகரன், “ஒருவாரத்திற்குள் கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் தவிர வேறு வழியில்லை என இதன்போது கூறியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இத்தகைய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும், முல்லைத்தீவில் அதே வகை இழப்புகளை சந்தித்த விவசாயிகள் இதுவரை உதவி பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு வந்து பொய்கள் கூறும் அதிகாரிகளால் மக்கள் ஏமாற்றப்பட முடியாது எனவும், இது தொடர்ந்தால் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் ரவிகரன் எம்.பி எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச்சபை அதிகாரிகள், ஒருவாரத்திற்குள் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
