அர்ஜென்டினாவுக்கு சாதகமான ஆட்டம்! FIFA அதிகாரிகளை விசாரணைக்கு தள்ளிய எகிப்தின் முறைப்பாடு
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் நடுவர் மற்றும் போட்டி அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கக் கோரி எகிப்திய கால்பந்து சங்கம் அளித்துள்ள முறைப்பாட்டை பெற்றுக்கொண்டதாக உலக கால்பந்து சம்மேளனம் (FIFA) உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த போட்டியில் எகிப்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், பின்னர் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தின் போது நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியர் மற்றும் VAR அதிகாரிகள் எடுத்த தீர்ப்புகள் பாரபட்சமானவை என்றும், அவை ஆட்டத்தின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தியதாகவும் எகிப்து குற்றஞ்சாட்டியுள்ளது.
இரத்து செய்யப்பட்ட கோல்
குறிப்பாக, முஸ்தபா ஜிகோ அடித்த இரண்டாவது கோல் VAR ஆய்வின் பின்னர் இரத்து செய்யப்பட்டமை மற்றும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் எகிப்து கோரிய இரண்டு பெனால்டி வாய்ப்புகள் மீளாய்வு செய்யப்படாதமை குறித்து விசாரணை நடத்துமாறு எகிப்திய கால்பந்து சங்கம் FIFAவிடம் உத்தியோகபூர்வ முறைபாடு அளித்துள்ளது.

தேசிய அணியின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைத்து அணிகளுக்கும் சமமான மற்றும் நியாயமான போட்டி சூழலை உறுதி செய்வதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக எகிப்திய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
போட்டிக்குப் பின்னர் கருத்து தெரிவித்த எகிப்து தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், இந்தப் போட்டியின் இறுதி முடிவு ஃபிஃபா வலியுறுத்தும் "நியாயமான விளையாட்டு" என்ற கொள்கைக்கு முரணானது எனக் கூறினார்.
மேலும், வீரர் முஸ்தபா ஜிகோ, நடுவரின் முடிவுகள் எகிப்தின் கடின உழைப்பை வீணடித்ததாகவும், போட்டி நியாயமாக நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
எவ்வாறான நடவடிக்கை
இந்நிலையில், எகிப்தின் முறைப்பாடு தொடர்பாக FIFA எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு உலகக் கோப்பை ஆட்டத்திற்குப் பின்னரும் நடுவர்களின் செயல்பாடுகளை FIFA மதிப்பாய்வு செய்தாலும், அவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பது அல்லது காரணங்களை வெளிப்படுத்துவது அரிதானதாகும்.
மற்றொரு முன்னேற்றமாக, மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கான அனைத்து போட்டி அதிகாரிகளும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இதுகுறித்து பிரான்ஸ் அணி பெரிதாக கவலைப்படவில்லை. பிரான்ஸ் வீரர் டயோட் உபாமெக்கானோ, "நடுவர் யார் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்களின் முழு கவனமும் மொராக்கோ அணியை எதிர்கொள்வதில்தான் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 4 மணி நேரம் முன்