ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் விசைப்படகுகளை மோதிக் கவிழ்க்க முயற்சி - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
கச்சதீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தெரிவித்து சிறிலங்கா கடற்படையினர் தம்மை விரட்டி அடித்ததாக தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் விசைப் படகினால் தமது படகுடன் மோதி கவிழ்க்க முயற்சித்ததாகவும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தமிழ் நாட்டின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நேற்றுக் காலை 150 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
விசைப்படகுகள் விரட்டியடிப்பு
தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரது விசைப்படகில் 5 மீனவர்கள் சென்று கச்சத்தீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் விசைப்படகுகளை விரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் ஒருவரின் படகையும் தமது விசைப் படகினால் மோதி கவிழ்ப்பதற்கு சிறிலங்கா கடற்படையினர் முற்பட்டுள்ளதாகவும் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு
இதனையடுத்து கரைக்கு திரும்பிய ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், மீனவளத்துறை அலுவலகம் சென்று சிறிலங்கா கடற்படையினரின் இந்தச் செயற்பாடு குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
