இஸ்ரேலில் இனம்தெரியாத நபர் திடீர் துப்பாக்கிசூடு -ஐவர் பரிதாப பலி
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே உள்ள பினெய் ப்ராக் எனும் பகுதியில், நேற்றைய தினம் அடையாளம் தெரியாத நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அந்த நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்குள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரை அதே இடத்தில் சுட்டுக்கொன்றனர். எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும் ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இஸ்ரேலில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாலஸ்தீன் நாட்டின் மேற்கு கரையைச் சேர்ந்தவர் என அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலையடுத்து இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நஃப்தாலி பென்னட், அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் இஸ்ரேலில் இது போன்ற தாக்குதல்கள் இனி நடைபெறாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
