சீரற்ற காலநிலை : வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய நீரேந்து பிரதேசங்கள் மற்றும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாறைகள் விழும் அபாயம்
குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் வாகன சாரதிகள் இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை (01) காலை 10.00 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதனால் பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.