அதிகரிக்கும் உணவு நெருக்கடி - பிள்ளைகளின் பிறப்புவீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
குறைந்த எடையுடன் பிறக்கும் பிள்ளைகள்
நுவரெலியா மாவட்டத்தில் அறுபது வீதமான (60%) குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் இம்மாவட்டத்தில் குறிப்பாக தோட்டங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததே ஆகும் என டொக்டர் எஸ். ப. இளங்கோ தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி ஹட்டன் அலுவலகத்தில் வைத்து இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதோடு, இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரக் கூலி கிடைக்கவில்லை. இந்நிலைமையினால் தோட்டத்திலுள்ள பல கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான போசாக்கு உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனாலேயே தோட்டத்தில் குறைந்த எடையுடன் பல குழந்தைகள் பிறப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த தோட்டப் பிள்ளைகள். இவ்வாறான நிலைமைகள் காரணமாக பெருந்தோட்டங்களில் கடுமையான போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகள் பிறக்கும் அபாயம் உள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு
எனவே இத்தோட்ட மக்களும் இந்நாட்டில் வாழும் மக்கள் என்பதால் அரசாங்கம் இந்த நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் எடைகுறைவான குழந்தைகள் பிறக்கின்றன.இதற்கு முக்கிய காரணம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததே முக்கிய காரணமாகும்.இதனால் அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
