நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
டொலரொன்றின் பெறுமதி
“கடந்த வருட இறுதிக்குள் டொலரொன்றின் பெறுமதி 365 ரூபாவாக இருந்தது.
தற்போது டொலரொன்றின் பெறுமதியை 320 ரூபாவிற்கு கொண்டுவர முடிந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
அதற்கமைய டொலரின் பெறுமதியை 11 வீதத்தால் குறைக்க முடிந்தது. எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாட்டை, சாதகமான பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வந்துள்ளதோடு, விவசாயம், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறையை கடந்த வருடத்தை விடவும் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
அத்துடன், மக்கள் கோரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல கொள்கையளவிலான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துள்ளதோடு, நாடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடியும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |