மட்டக்களப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டு பெண் கைது
மட்டக்களப்பு அம்பிளாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய பிரஜையான பெண் ஒருவரை நேற்று (18) இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் மலேசிய நாட்டுப் பெண் ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட நிலையில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் மலேசியாவில் இருந்து கடந்த 10.05.2026 வந்தமை தெரியவந்து குறித்த பிரதேசத்திலுள்ள தமது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
காலாவதியான விசா
இந்நிலையில் அங்கு தவறி விழுந்து தனது வலது காலை முறித்துக் கொண்ட நிலையில் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவரது விசா காலம் கடந்த 08.09.2026 அன்று முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் அவரது உடல் நலக்குறைவு காரணமாக அவர் சரியான காலத்தில் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் அவரது விசா முடிவதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் இதையறிந்த சிலர் காவல் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |