ஈழத்தமிழினத்தின் அரசியல் விடுதலையைப் பாடிய கவிஞர் சேரன் காலமானார்
ஈழத்தின் முக்கிய கவிஞரும், நவீன கவிதையின் முதல்வரான மகாகவி ருத்ரமூர்த்தியின் புதல்வருமான சேரன் உருத்திரமூர்த்தி கனடாவின் டொரொண்டோவில் காலமானார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த இவர், 1972ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை வெளியிட்டார். எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கிய அவர், ஈழத்தில் கவிஞராகவும் அரசியல் ஊடகவியலாளராகவும் இயங்கினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற இவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
கவிதைகளின் பாடுபொருள்
பின்னர் வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்றவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். போர், இடப்பெயர்வு, இழப்பு, ஈழத்தமிழினத்தின் நினைவுகள் என்பவையே இவரது கவிதைகளின் பாடுபொருட்களாக இருந்தன.

"இரண்டாவது சூரிய உதயம்", "காடாற்று" போன்ற தொகுப்புகளில் அந்த வலி பதிவாகியுள்ளது. இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கவிதைக்கு அப்பால் நாடகம், இதழியல், ஆய்வு ஆகிய துறைகளிலும் பங்களித்தார். இலங்கையின் தமிழ்த் தேசியம் குறித்த "Pathways of Dissent" உள்ளிட்ட ஆய்வு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். நூலக எரிப்பு, இனவழிப்புக்குப் பின்னான கவிதை குறித்தும் எழுதியுள்ளார். கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, ஓ.என்.வி. விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர்.
புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்ந்தபோதும், ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை உலக அரங்கில் பதிவு செய்தவர் என இலக்கிய உலகம் அவரை நினைவுகூருகிறது. கவிஞர் சேரனின் இழப்பு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கவிதைத் தளத்தில் ஒரு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |