கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றின் உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சிற்றூழியர்களை தொழில்நுட்பக்கல்வியில் இணைத்த அமைச்சர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2015-ஆம் ஆண்டில், சந்தேக நபர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது, உரிய சட்ட நடைமுறைகளைப் புறக்கணித்து, காலி மாவட்டத்திலிருந்து நூற்று முப்பத்து நான்கு சிற்றூழியர்களைத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சேர்த்துள்ளார் என்று தெரிவித்தனர்.

காலி மாவட்டத்தில் உள்ள அவரது அரசியல் ஆதரவாளர்களும் இதே முறையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்.தொழில்நுட்பக்கல்லூரி பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய அழுத்தம்
மேலும், ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்ட யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு, சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் அழுத்தம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் செயல்களின் மூலம், சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, "ஊழல்" குற்றத்தைச் செய்துள்ளார் என்று இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபர் குறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான், சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சரை தலா ரூ. 2 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணையாளர்களின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர் வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், சாட்சிகளைப் பாதிக்காமல் இருக்குமாறும் அவரை எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு ஓகஸ்ட் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |