நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்.....! அடித்துக் கூறும் தவிசாளர்
நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தவிசாளர் தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிரான வேலைத்திட்டங்களில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (22.03.2024) சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் இலக்கு
அவர் மேலும் குறிப்பிடுகையில் "நாடளாவிய ரீதியில் யானை சின்னத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது.

நாடு வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே அதனை மீட்டெடுத்திருக்கின்றது. அதற்கமைய இனிவரும் காலங்களிலும் நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சி அதன் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
1994 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரானதிலிருந்தே ரணில் விக்ரமசிங்க இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்.
எனவே தற்போது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவ்வாறானவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமூகத்தில் எந்தவொரு சமூகத்தினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே முதலில் இந்த அறிக்கையை முழுமையாக வாசிக் குமாறு சகலரையும் வலியுறுத்துகின்றோம்.
அவ்வாறு அதை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வேலைத்திட்டங்களில் இருந்து வெளியேறுவார்கள்.
இம்முறை தேர்தலில் அரசை விடுத்து ஏனைய கட்சிகளுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத் துழைப்புக்களை வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கின்றார்.
எனவே இளம் தலைமுறையினர் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதற்கமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 21 மணி நேரம் முன்