சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவிற்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சந்தேகநபர், ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்கள்
அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணைக் கோரிக்கை
இதன்போது சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவினால் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிணைக் கோரிக்கைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரிகள் அன்றைய தினம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவை இன்று (05-05-2026) முற்பகல் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |