வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
வவுனியாவில் வீடொன்றில் 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நால்வரும் இன்று (24-08-2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
காவல்துறையினரிடம் முறைப்பாடு
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 16.750 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா தலைமை காவல் நிலைய குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
அத்தோடு அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் நகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பிரதான குற்றவாளி
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி, கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த நபர் கொள்ளையிட்ட ஒருபகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |