அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக படையடுத்த சர்வதேச நாடுகள்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) வெளிநாட்டு இராணுவத் தளங்கள் அமைப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் கூட்டாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.
இந்நிலையில், அங்கு மீண்டும் இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு நாடு
தங்களது முக்கிய தளமாக விளங்கிய பாகிராம் விமானப்படைத் தளத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு தலிபான் நிர்வாகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், அய்க்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரையொட்டி, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் கலந்துரையாடியுள்ளனர்.
இறையாண்மை
இதையடுத்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும்.
புதிய இராணுவத் தளங்களை அமைப்பது பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.
இராணுவ முயற்சி
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்குக் காரணமான நேட்டோ உறுப்பு நாடுகள், புதிய இராணுவ முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக அந்நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் செழிப்புக்கும் உதவ வேண்டும்.
ஆப்கான் அகதிகளுக்கு நிதி உதவி அளித்து அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
அய்.எஸ்.அய்.எல், அல்கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான ஆட்சி அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
