ரணிலின் உறுமய திட்டத்தில் நிதி மோசடி: இருவர் கைது
'உறுமய' திட்டத்தின் கீழ் நிரந்தர பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து சுமார் 100 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 வயது பெண்ணொருவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதி துஷ்பிரயோகம்
சம்பவத்துடன் தொடர்புடைய மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் மோசடியாகப் பெற்ற பணத்தில் 2 மில்லியன் ரூபாயை முடக்க நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு பெறவும் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு "உறுமய" திட்டத்தின் போர்வையில், பத்திரங்கள் இல்லாத நிலங்களுக்கு நிரந்தர பத்திரங்கள் வழங்கப்படும் எனக் கூறி, இந்த மோசடி மற்றும் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உறுமய’ தேசிய வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போது செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
