அரசாங்கத்தின் பிடிவாதத்தால் ஸ்தம்பிக்கப் போகும் நாட்டின் போக்குவரத்து சேவை!
அனைத்துப் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று (02-06-2026) அவசரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்குச் சாதகமான முறையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாமை குறித்து ஆராய்ந்து தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் சேவை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இன்றைய கலந்துரையாடலின் பின்னரே பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
எங்களது சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பேருந்து சங்கங்களின் தலைவர்கள் இன்று காலை ஒன்றுகூடுகின்றனர்.

பிரதானமாக இந்த எரிபொருள் விலை உயர்வுப் பிரச்சினையிலிருந்து எங்களது தொழில்துறையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தே இங்கு ஆராயவுள்ளோம்.
ஏனெனில் அரசாங்கத் தரப்பிலிருந்து இதற்கு முறையான எவ்விதப் பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
பொருளாதாரச் சூழல்
அவர்கள் தங்களது கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்குவது நட்டத்தை ஏற்படுத்துவதாகப் பேருந்து உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தருணத்தில் தொழில்துறையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாகப் பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளிலிருந்து தற்காலிகமாக விலகி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அனைத்துப் பேருந்து உரிமையாளர்களும் எங்களை வற்புறுத்தி வருகின்றனர்.
எது எப்படியிருந்தாலும் சங்கத்தின் தலைவர்களுடன் இன்று விரிவாகக் கலந்துரையாடிவிட்டு எங்களது இறுதி முடிவை இன்று பகிரங்கமாக அறிவிப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |