இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி 7 நாடுகள் அறிக்கை
இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டின் துணைப் பிரதமர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜி 7 நாடுகள் அமைப்பு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
எனினும் மனிதாபிமான மோதல் தவிர்ப்பிற்கான அழைப்பை ஜி 7 நாடுகள் விடுத்துள்ள போதிலும் இஸ்ரேலின் தீவிரமான தாக்குதல்கள் ஒரே நாளில் 200 பேரின் உயிர்களை காவு கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது.
காசாவில் தீவிர தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 214 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்பிரகாரம் கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 569 ஆக உயர்வடைந்துள்ளது.
குறிப்பாக காசாவின் வட பிராந்தியம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் இன்றும் தெற்கு நோக்கி இடம்பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதுகாப்பான வழித்தடங்கள் ஊடாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பொதுமக்கள் செல்வதற்கு ஐந்து மணிநேர கால அவகாசத்தை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் வழங்கியிருந்தனர்.
ஜி 7 வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு
இந்த நிலையில் காசா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை குறித்து ஜி 7 செல்வந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜப்பானில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்பின்னர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ஆயிரத்து 400 பேரின் உயிர்களை காவுகொண்ட ஹமாஸ்சின் தாக்குதல்களுக்கு ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆதரவு வழங்கியுள்ள ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், காசாவில் மனிதாபிமான மோதல் தவிர்ப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.