மர்மமாக திரும்பப் பெறப்பட்ட வழக்கு: ரங்க திசாநாயக்கவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்கவின் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏன் திடீரென மர்மமாக திரும்பப் பெறப்பட்டது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (07.10.2025) நடைபெற்ற உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்கவின் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையிழந்த மக்கள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்க, நான் அவருக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
நான் ஆறு ஜனாதிபதிகளுடன் ஊழலுக்கு எதிராகப் போராடிய ஒரு மனிதன். தனது சொந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி இரண்டு முறை தனது அமைச்சுப் பதவிகளை இழந்த ஒரு மனிதன்.
எனவே, அச்சுறுத்தல்களால் என்னை அமைதியாக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஊழல் ரீதியாக குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டால், இந்த நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?
பதவி விலகல்
எனவே, நான் ரங்க திசாநாயக்கவிடம் நேரடியாக கூறுகிறேன். நான் சிறையில் அடைக்கப்பட்டாலும், நீங்கள் அந்த பதவியை எடுக்க வழிவகுத்த ஊழல் நடவடிக்கையைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
உங்களுக்கு சுயமரியாதை இருந்தால், நீங்கள் வெட்கப்பட்டு உங்கள் பதவியில் இருந்து விலகுவீர்கள் என நான் நம்புகிறேன்.
தன்னைப் பற்றி ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஊடகங்களிடம் பேசாமல் அரசியலமைப்பு சபையில் முறைப்பாடு வழங்குமாறு ரங்க திசாநாயக்க கூறுகிறார்.
எனினும், அவருடைய நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏன் திடீரென மர்மமாக திரும்பப் பெறப்பட்டது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
இதேவேளை, இன்று (07.10.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இவ்விடயம் தொடர்பில் சபையில் மேலும் கேள்விகளை தொடுத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் விரைவில் பதில் வழங்குவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
