திறைசேரி அதிகாரியின் மரணத்தில் கம்மன்பிலவின் போலி அறிக்கை! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை
திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அவை உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகளுக்கு முரணானவை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் மனைவி அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்ததாக கம்மன்பில கூறியிருந்த நிலையில், அத்தகைய முறைப்பாடு எதுவும் அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ரங்க ராஜபக்சவின் மரணம் தற்கொலையா அல்லது தற்கொலையாகச் சித்தரிக்கப்பட்ட கொலையா என்ற கேள்வியை கம்மன்பில எழுப்பியிருந்ததுடன், கைரேகை ஆதாரங்கள் குறித்துத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
கம்மன்பிலவுக்கு அழைப்பாணை
இருப்பினும், பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளின்படி, மரணத்தின் போது எவ்வித போராட்டமோ அல்லது வெளி நபர்களின் தாக்குதலோ இடம்பெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

காயங்கள் அவராகவே ஏற்படுத்திக்கொண்டவை என்பதும், தற்போதுள்ள ஆதாரங்களின்படி இது ஒரு தற்கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் ஆகியோரின் கண்டுபிடிப்புகளுக்கு கம்மன்பிலவின் கருத்துக்கள் முரணாக உள்ளதால், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரி மோசடி
மேலும், இது தொடர்பான மேலதிக ஆதாரங்கள் ஏதேனும் அவரிடம் இருந்தால், அவற்றை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் கோரப்படலாம் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

திறைசேரியல் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் மர்மமாக உயிரிழந்ததன் பின்னணியில் கம்மன்பிலவின் மேற்படி கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |