கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeewa) கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், இன்று (21) ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு (Negombo) காவல்துறையில் பணியாற்றிய காவல்துறை உத்தியோகத்தருக்கும், இந்தக் கொலை தொடர்பாக தேடப்படும் இஷாரா செவ்வந்திக்கும் இடையே தொடர்புகள் இருந்ததற்கான உண்மைகள் தெரியவந்துள்ளதாக, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சாட்சியங்களை முன்வைத்தனர்.
55 பேரிடம் விசாரணை
மூன்றாவது சந்தேக நபரின் தொலைபேசியில் இரண்டு துப்பாக்கிகளின் புகைப்படங்கள் இருந்ததாகவும், அவற்றை அவர் நீக்கிவிட்டதாகவும், பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த புகைப்படங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புகைப்படங்களில் உள்ள துப்பாக்கிகளில் ஒன்று துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், மற்ற துப்பாக்கி குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 25 ஆதாரங்கள் அரச நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விளக்கமறியலை நீடித்தல்
கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அத்துருகிரிய காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமையால், சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்