பாம்பு கடித்ததை அறியாத சிறுமியின் உயிர் பறிபோனது
பாம்பு கடித்ததை அறியாத சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் பனாகொட சமகி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சமன்மாலி என்ற 11 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடைக்கு சென்று கொண்டிருந்த போது
உயிரிழந்த மாணவி தனது மைத்துனியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் பாம்பு கடித்துள்ளது. பின்னர் அவருடைய தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வரை தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்ததாக சிறுமி கூறியுள்ளார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி
இதனை அடுத்து சிறுமியின் தாய் பாம்பு கடித்ததை அறியாமல் குழந்தைக்கு இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார். அப்போது சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 2 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (18) கொடகம பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.