ஞானசாரதேரரின் காவியுடை களைவு அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் :எச்சரிக்கும் கம்மன்பில
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் சீவரம் அகற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தச் செயல் மூலம் அரசாங்கம் பாரதூரமான தவறை இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறித்து கருத்து தெரிவித்த கம்மன்பில, அந்தச் செயல் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சசான மரபுகளுக்கு முரணானது என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை
இது தொடர்பாக எதிர்காலத்தில் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறைச்சாலை திணைக்களத்தின் நிரந்தர உத்தரவு 550 ஆம் பிரிவின்படி, குற்றவாளி அல்லது சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவர் தனது சாதாரண உடையில் வர அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஒரு பிக்குவின் சாதாரண உடை சீவரம் என்பதால், அதை அகற்றி நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது சட்டத்திற்கு எதிரானது என்பதே அவரது வாதம்.
ஞானசார தேரரின் பிக்குத்துவத்தை ஒருபோதும் பறிக்க முடியாது
“இந்த நாட்டில் மன்னர்கள் கூட காவி உடைக்கு தலைவணங்கினர். தவறுதலாக ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தைப் பெற்ற மதச்சார்பற்ற பழங்குடியினர் குழுவொன்று, 2300 வருடங்களாக இந்த நாட்டில் இருக்கும் சசான வரலாற்றை மாற்ற நாம் அனுமதிக்க முடியாது,” என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரரின் சீவரத்தை அரசாங்கத்தால் அகற்ற முடிந்தாலும், அவரது பிக்குத்துவத்தை ஒருபோதும் பறிக்க முடியாது என்று அவர் கூறினார்.
சீவரம் அணியாத போதும், ஞானசார தேரர் நீதிமன்ற மண்டபத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் உட்பட அனைவரும் வழக்கம் போல் அவருக்கு வணக்கம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னைய வழக்குகளில் கூட காவியுடை களையப்படவில்லை
ஞானசார தேரருக்கு முன்னரும் வழக்குகள் இருந்ததாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் சீவரம் அகற்றப்பட்டு சிவில் உடையில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்றும் கம்மன்பில நினைவுபடுத்தினார்.

ஒரு பிக்குவின் சீவரம் அவர் பராஜிகம் ஆனபோது மட்டுமே அகற்ற முடியும் என்றும் அவர் கூறினார். அவர் விளக்கியபடி, ஒரு பிக்கு திருட்டு, பாலியல் அத்துமீறல் அல்லது கொலை தொடர்பாக சட்டத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும்போது பராஜிகம் ஆகிறார். அப்போது சீவரம் அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பிக்குத்துவம் ரத்தாகிவிடும் என்பதே அவரது கருத்து.
அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்
“நீதிமன்றத்தில் எழுந்து அனுமதி இல்லாமல் பேசுவது பராஜிகத்திற்கு காரணம் என்று சட்டப் புத்தகத்திலோ, பௌத்த நூல்களிலோ இல்லை,” என்றும் அவர் கூறினார்.

நலிந்த ஜயதிஸ்ஸ உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள் இது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை கம்மன்பில விமர்சித்தார். கார்ல் மார்க்ஸின் புத்தகங்களைப் படித்து, பௌத்த நூல்களைப் படிக்காதவர்களால் அத்தகைய கருத்துக்களைக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம், அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் தான் நேற்று நடந்தது என்று நாங்கள் பயமின்றி கூறுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |