டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மதகுருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று(28) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அது தொடர்பாக சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
குறிப்பிட்டார்.