கோட்டாபயவின் முடிவை ஏற்கமுடியாது - கண்டனத்துடன் வெளிவந்த அறிக்கை
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் (S. M. M. Muszhaaraff).
அவர் இன்று(27) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
''விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரச தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணியின் தலைவராக ஞானசாரர் நியமிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது தேரர் குறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்ற அதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்ற ஒருவரே இவர்.
அதுமட்டுமன்றி ஞானசார தேரர் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக தொடர்ச்சியான வெறுப்புப் பிரசார காரராக தொழிற்பட்டு வருபவர்.
அவ்வாறான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணிக்கு தலைமை தாங்க எந்த விதத்திலும் பொருத்தமற்றவர். அரச தலைவரின் இந்த நியமனம் பொருத்தமற்றதும் கண்டனத்திற்கும் உரியது - எனக் கூறப்பட்டுள்ளது.