கைதை தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு : நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு நேற்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர்
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விசாரணையின் போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரின் கைது நடவடிக்கையைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
மனு மீதான பரிசீலனை
எனினும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலைதான் பெறப்பட்டதாகவும், பிரதிவாதிகளிடமிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் எதிர் தரப்பினரிடமிருந்து எந்த அறிவுறுத்தல்களும் இல்லாததால், மனுதாரர் கைது செய்யப்பட மாட்டார் என்று நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளிக்க இயலவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நீதிமன்றம் மனு மீதான பரிசீலனையை இன்று பிற்பகல் வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |