அரசாங்கத்தின் நோக்கம் இராணுவ ஆட்சியல்ல - தமிழர் பகுதியில் வைத்து சஜித் கூறிய விடயம்
நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்குமென்று நான் எண்ணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. டீல் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான். இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித்பிரேமதாச வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுட்டவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற வேலை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாக செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும்.
இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது.
இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம். தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும்.
நாம் இந்த நாட்டின் அரச தலைவராகி இந்த மக்களின் வீட்டு திட்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.
மேலும், ஊடகம் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.
இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு. நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம். மக்களது பிரச்சினைகளை நாம் கட்டம் கட்டமாக செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது.
இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்கு தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான்.
நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இந்த அரசாங்கத்திற்கும் நாட்டை இராணுவ ஆட்சியை கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை. நாட்டிற்குள் எந்தவித பிரச்சனைகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு இனத்துடனும், மதத்துடனும் முரண்பட முடியாது.
ஒரு இனம் அல்லது குறித்த தொகை மக்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது தமது தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அதனை கேட்க உரிமை உள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.